வேலூர்-காட்பாடியில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை


வேலூர்-காட்பாடியில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை
x
தினத்தந்தி 22 Feb 2019 4:30 AM IST (Updated: 21 Feb 2019 9:19 PM IST)
t-max-icont-min-icon

வேலூர்- காட்பாடியில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் வீடு மற்றும் அலுவலகம் என 4 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

காட்பாடி, 

காட்பாடி காந்திநகர் 8-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய தம்பி மோகன். இவர் பாரதிநகர் விரிவு பகுதியில் வசித்து வருகிறார். ராமூர்த்தியின் பங்குதாரர் ஜெயப்பிரகாஷ். கோபாலகிருஷ்ணா நகர் 1-வது தெருவில் வசித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் வேலூர், காட்பாடி உள்பட பல்வேறு இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை சென்னையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 4 குழுக்களாக காட்பாடிக்கு வந்தனர். அவர்கள் ராமமூர்த்தி, அவருடைய தம்பி மோகன் மற்றும் பங்குதாரர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வீடுகளுக்கு காலை 7 மணிக்கு ஒரேநேரத்தில் சென்றனர். அதே நேரத்தில் வேலூர் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள இவர்களுடைய அலுவலகமான சாய்சிட்டி சென்டருக்கும் ஒரு குழுவினர் சோதனை செய்ய சென்றனர்.

ராமமூர்த்தி வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் அவருடைய பணபரிவர்த்தனை, ரியல் எஸ்டேட் தொழிலில் எத்தனை இடங்களில் முதலீடு செய்துள்ளார், எவ்வளவு இடங்களில் நிலங்களை விற்றுள்ளார் என்பது உள்பட பல்வேறு தகவல்களை கேட்டு விசாரணை நடத்தினர். ரொக்க கையிருப்பு எவ்வளவு உள்ளது, நகைகள் எவ்வளவு உள்ளது என்றும், வீட்டில் வைத்துள்ள சொத்து ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தினர். எத்தனை வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார் என்பது குறித்தும், அதில் நடைபெற்ற பண பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை செய்தனர்.

மேலும் வீட்டில் ஒவ்வொரு அறைகளாக சென்று சோதனை நடத்தினர். சோதனையின்போது வீட்டில் இருந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. குழந்தைகள் மட்டும் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ராமூர்த்தியின் தம்பி மோகன் வீட்டுக்கு சென்ற அதிகாரிகள், தகவல் கேட்கசென்ற போலீசார் உள்பட யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். பணம் கையிருப்பு, நகைகள், ஆவணங்கள், சொத்துகள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்த குடிநீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளே பணம் மற்றும் ஆவணங்கள் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் சோதனை நடத்தினர்.

ஜெயப்பிரகாஷ் வீட்டுக்கும் ஒரு குழுவினர் சென்றனர். அப்போது ஜெயப்பிரகாஷ் தனது மனைவியுடன் சிங்கப்பூர் சென்றிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த ஜெயப்பிரகாசின் தாயார் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அவருடைய பண பரிவர்த்தனைகள், சொத்து ஆவணங்கள், ரியல் எஸ்டேட் தொழிலில் செய்த முதலீடுகள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அவருடைய வங்கி கணக்குகள் குறித்தும், அதில் எவ்வளவு பணபரிவர்த்தனை நடந்துள்ளது என்பதுகுறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேநேரத்தில் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள சாய்சிட்டி சென்டர் அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

காலையில் தொடங்கி மாலைவரை நடந்த இந்த சோதனையில் பணங்கள், ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்தும், வேலூர் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள நிலப்பிரச்சினை தொடர்பாக இந்த சோதனை நடந்ததா? என்பது குறித்தும் தகவல் தெரிவிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதே போல ஜோலார்பேட்டை, கே.வி. குப்பம் ஆகிய இடங்களிலும் இந்த சோதனை நடந்தது. ஒரேநேரத்தில் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story