தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் ஆனந்த குளியல் போட்ட யானைகள் ஆசிரியர்களின் வாகனத்தை வழிமறித்ததால் பரபரப்பு


தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் ஆனந்த குளியல் போட்ட யானைகள் ஆசிரியர்களின் வாகனத்தை வழிமறித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Feb 2019 4:15 AM IST (Updated: 21 Feb 2019 11:40 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் யானைகள் ஆனந்த குளியல் போட்டன. முன்னதாக ஆசிரியர்களின் வாகனத்தை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் அடிக்கடி உணவை தேடி ஊருக்குள் வருகின்றன. இந்த நிலையில் அய்யூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் வழக்கமாக அருகில் உள்ள சாம ஏரியில் குளித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

தற்போது கோடை வெயில் தொடங்கி விட்ட நிலையில் யானைகள் நேற்று முன்தினம் மாலை சாம ஏரிக்கு வந்தன. அவை ஏரியில் ஆனந்தமாக குளியல் போட்டன. குட்டிகளுடன் தாய் யானைகள் ஏரியில் குளித்தும் தண்ணீரை துதிக்கையால் உறிஞ்சி உடல் மீது அடித்தும் விளையாடியது. நீண்ட நேரமாக குளித்த யானைகளை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

மேலும் சிலர் செல்போன் மூலம் யானைகளை படம் எடுத்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு யானைகள் மீண்டும் அய்யூர் வனப்பகுதிக்குள் சென்றது. முன்னதாக பெட்டமுகிலாளம் மலை கிராம அரசு பள்ளியில் பணியாற்ற கூடிய ஆசிரியர்கள் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து ஒரு வேனில் தேன்கனிக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அய்யூர் வனப்பகுதி வழியாக அவர்கள் சென்ற போது காட்டு பகுதியில் இருந்து திடீரென்று 3 யானைகள் சாலையின் குறுக்கே வந்தன. நீண்ட நேரமாக யானைகள் வழியை மறித்து நின்று கொண்டிருந்தன. இதனால் வேனில் இருந்த ஆசிரியர்கள் அச்சத்தில் உறைந்து போயினர். சிறிது நேரத்திற்கு பிறகு அந்த யானைகள் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பின்னரே ஆசிரியர்கள் இருந்த வேன் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story