அய்யலூர் அருகே சாலை பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்


அய்யலூர் அருகே சாலை பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்
x
தினத்தந்தி 21 Feb 2019 10:30 PM GMT (Updated: 21 Feb 2019 7:37 PM GMT)

அய்யலூர் அருகே சாலை அமைக்கும் பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வடமதுரை, 

திண்டுக்கல்லை அடுத்த அய்யலூரில் இருந்து கெங்கையூர், அரசன்செட்டிபட்டி வழியாக புத்தூர் செல்லும் தார்சாலை உள்ளது. இந்த சாலை அமைந்துள்ள இடம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 24 அடி அகல ஆயக்கட்டு வாய்க் காலாக இருந்தது. வாய்க்காலையொட்டி இருந்த ஒற்றையடி பாதையையே பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் வாய்க்கால் தண்ணீர் இன்றி போனதால் ஆக்கிரமித்து, அங்கு தார்சாலையும் அமைக்கப்பட்டது.

இதனால் வாய்க்கால் இருந்த இடமே தெரியாமல் மாயமானது. ஆயக்கட்டு விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர். மேலும் கடந்த சில மாதங் களுக்கு முன்பு ஆக்கிரமிப்பால் மாயமான வாய்க் காலை மீண்டும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையறிந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாய்க் கால் மீண்டும் அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து மறியல் போராட்ட முடிவை விவசாயிகள் கைவிட்டனர்.

இந்த நிலையில் அந்த வாய்க் கால் இருந்த இடத்தில் உள்ள சாலையை சீரமைத்து புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த விவசாயிகள், சாலை பணிகள் நடக்கும் இடத்துக்கு வந்தனர். பின்னர் தார்சாலை அமைக் கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் வாய்க்கால் அமைக்காமல் சாலை அமைக் கும் பணிகள் நடைபெறக் கூடாது என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அய்யலூர் பேரூராட்சி செயல் அலுவலர் முகமது யூசுப் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வாய்க்கால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் சாலை பணிகளை நடக்க விடமாட்டோம் என தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அய்யலூர் பேரூராட்சி அலுவலகத்தில் வேடசந்தூர் தாசில்தார் சுரேஷ்கண்ணன் முன்னிலையில் விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அதில், அப்பகுதியில் 12 அடி அகலத்துக்கு மட்டும் சாலை அமைத்துக்கொண்டு மீதம் உள்ள 12 அடியில் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பணிகள் 10 நாட்களில் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story