ஆரணியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்


ஆரணியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 22 Feb 2019 3:30 AM IST (Updated: 22 Feb 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

ஆரணி, 

திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துடன் ஆரணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தை தரம் உயர்த்தியும், ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் ஆரணி நகர பொதுமக்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஆரணி ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்க நிர்வாகிகள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், போக்குவரத்து துறை அமைச்சர் மூலமாக அரசுக்கு பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து அதன் தொடக்க விழா நேற்று விழுப்புரம் தலைமை போக்குவரத்து ஆணையர் எம்.கே.சுரேஷ் குமார் தலைமையில் நடந்தது. செஞ்சி வி.ஏழுமலை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், வி.பன்னீர்செல்வம், திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் த.அறிவழகன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மதிவாணன், உதவி செயற் பொறியாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு தரம் உயர்த்தப்பட்ட புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம், பெயர் பலகை மற்றும் கல்வெட்டை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஆரணி மோட்டார் வாகன அலுவலகத்தில் இதுவரை 4,652 பேர் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனர். அதே போல 8,859 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் தற்காலிக பஸ்களுக்கும், தேசிய சரக்கு வாகனங்களுக்கும் உரிமம் இங்கேயே பெற்றுக்கொள்ளலாம்’ என்றார்.

விழாவில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், சாந்திசேகர், அ .கோவிந்தராசன், வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, கூட்டுறவு சங்க தலைவர்கள் அசோக்குமார், எம்.வேலு, ஜி.வி.கஜேந்திரன், மகளிர்அணி நிர்வாகி கலைவாணி, பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கோபால், செயலாளர் ராஜா, பொருளாளர் காந்தி, செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.பாபு, நிதி செயலாளர் பி.டி.எஸ்.சம்மந்தம், செயற்குழு உறுப்பினர்கள், பஸ் அதிபர்கள், ஆரணி தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பாஸ்கர், செயலாளர் கார்த்தி, பொருளாளர் ரமேஷ், ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்க தலைவர் என்.ராஜா, செயலாளர் எஸ்.பழனி, பொருளாளர் களம்பூர் சேகர், சங்க நிர்வாகிகள் டி.டி.குமார், சமீஸ்நூல்லா, நூர், சங்கர், கோபால், அசோக் மற்றும் ஆரஞ்சு இன்டர்நேஷ்னல் பள்ளி தாளாளர் கே.சிவக்குமார், எய்ம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சிவசந்திரன், பொருளாளர் கருணாமூர்த்தி, பிங்க்ஸ் பப்ளிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆர்.ரமேஷ், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஏ.எச்.இப்ராகிம், ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் என்.முத்துலிங்கம், வி.எஸ்.பி. மோட்டார்ஸ் உரிமையாளர் வி.சுரேஷ்பாபு, பி.எம்.வி. மோட்டார் உரிமையாளர் வி.பிரகாஷ் உள்பட திரளான கட்சி பொறுப்பாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story