சிலைகள், நினைவு சின்னங்கள் முன்பு விளம்பர பேனர் வைக்க கூடாது


சிலைகள், நினைவு சின்னங்கள் முன்பு விளம்பர பேனர் வைக்க கூடாது
x
தினத்தந்தி 21 Feb 2019 10:45 PM GMT (Updated: 21 Feb 2019 7:49 PM GMT)

சிலைகள், நினைவு சின்னங்கள் முன்பு விளம்பர பேனர் வைக்க கூடாது என்று திண்டுக்கல்லில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் கூறினர்.

திண்டுக்கல், 

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புகளின் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி திருமணம் உள்ளிட்ட குடும்ப விழாக்களுக்கும் விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன. இந்த விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு 16 விதிகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சியில் அரசியல் கட்சியினர், டிஜிட்டல் விளம்பர பேனர்கள் அச்சக உரிமையாளர்கள், தனியார் விளம்பர நிறுவனத்தினருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மாநகராட்சி கமிஷனர் மனோகர் தலைமை தாங்கினார். நகரமைப்பு அலுவலர் உதயக்குமார், திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

இதில் விளம்பர பேனர்கள் வைப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ.விடம் விண்ணப்பிக்க வேண்டும். அதோடு நில உரிமையாளரின் தடையில்லா சான்று, போலீசாரின் தடையில்லா சான்று, விளம்பர பேனருக்கான கட்டணம் மற்றும் முன்வைப்பு தொகை கட்டணம் செலுத்திய ரசீதுகளை இணைக்க வேண்டும்.

அதேபோல் 10 அடி அகலத்துக்கு குறைவான சாலைகளில் ஏதேனும் ஒரு பக்கத்தில் வைக்க வேண்டும். ஒரு சாலையில் வைக்கப்படும் அனைத்து பேனர்களும் ஒரே அளவில் இருக்க வேண்டும். கல்வி நிறுவனம், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிகளில் சாலை முனைகள் முன்பும், சிக்னல் விளக்குகள் அமைந்த சந்திப்பில் 100 மீட்டர் தூரத்துக்குள்ளும் பேனர்கள் வைக்கக் கூடாது. மேலும் சிலைகள், நினைவு சின்னங்கள், சுற்றுலா இடங்கள் முன்பும் வைக்கக் கூடாது.

மேலும் 6 நாட்களுக்கு மேல் விளம்பர பேனர்களை வைக்க அனுமதி கிடையாது. விளம்பர பேனர்கள் தொடர்பான புகார்களை கலெக்டருக்கு தெரிவிக்கலாம். மேலும் விளம்பர பதாகை சட்டம் மற்றும் விதிகளை மீறும் நபர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்பன உள்பட 16 விதிகளையும் அதிகாரிகள் விளக்கினர்.

அப்போது பேனர் அனுமதிக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த அனுமதிக்க வேண்டும். திருமணம் போன்ற குடும்ப விழாக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். பேனர் வைப்பதற்கு ஒரே இடத்தில் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வசதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சியினர், அச்சக உரிமையாளர்கள், விளம்பர நிறுவனத்தினர் வலியுறுத்தினர். மேலும் விளையாட்டு விழாக்களுக்கு பேனர் வைக்க அனுமதி வழங்க அலைக்கழிப்பதாக புகார் கூறினர். 

Next Story