திருவொற்றியூரில் ரூ.1½ கோடியில் புதிய நடைமேம்பாலம், பயணச்சீட்டு மையம் திறப்பு


திருவொற்றியூரில் ரூ.1½ கோடியில் புதிய நடைமேம்பாலம், பயணச்சீட்டு மையம் திறப்பு
x
தினத்தந்தி 22 Feb 2019 4:30 AM IST (Updated: 22 Feb 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் ரூ.1½ கோடியில் அமைக்கப்பட்ட புதிய நடைமேம் பாலம் மற்றும் பயணச்சீட்டு மைய புதிய கட்டிடத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்தார்.

திருவொற்றியூர்,

தென்னக ரெயில்வே சார்பில், ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு நெல்லூர்-சென்னை பயணிகள் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதேபோல் திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் ரூ.1.42 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ரெயில்வே நடைமேம்பாலம், பயணச்சீட்டு மைய புதிய கட்டிடத்தை காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

திருவொற்றியூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், பாண்டியராஜன், அ.தி.மு.க. எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், வெங்கடேஷ்பாபு, பி.வேணுகோபால், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமி(தி.மு.க.), கே.எஸ்.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர்.

விரைவு பயண சேவை

நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் பேசும்போது, “திருவொற்றியூரில் சரக்கு ரெயில் முனையம் அமைக்கவேண்டும். ராயபுரத்தில் ரெயில்முனையம் அமைக்க வேண்டும். டெல்லி- லக்னோ ரெயில் பயணம் 4 மணி நேரம் இருப்பதுபோல சென்னை-கன்னியாகுமரிக்கு விரைவு பயண சேவையை தொடங்கவேண்டும். ரெயில் தண்டவாள கட்டமைப்புக்கான நிதியை அதிகப்படுத்தி தரவேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, “தென்சென்னையை போல வடசென்னையும் வளர்ச்சி அடைய ரூ.16 ஆயிரம் கோடியில் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளது. இரும்பு மற்றும் நிலக்கிரி கையாளுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க ரூ.160 கோடியில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது முழுமை பெறும்போது வடசென்னையில் போக்குவரத்து முற்றிலுமாக சீராகும். ரூ.2,600 கோடியில் வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வரையிலான 2-வது கட்ட மெட்ரோ ரெயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது” என்றார்.

Next Story