தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.1¼ கோடி விளைபொருட்கள் விற்பனை
தேசிய வேளாண் சந்தை மூலம், கம்பம் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் ரூ.1¼ கோடி விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கம்பம்,
கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், தேசிய வேளாண் சந்தை குறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கான கருத்தரங்கம் நடந்தது. இதற்கு தேனி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சத்தியராய் தலைமை தாங்கினார். கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண் காணிப்பாளர் சுமதி வரவேற்றார்.
தேனி விற்பனைக்குழு செயலாளர் பால்ராஜ், வேளாண்மை அலுவலர் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை வேளாண்மை உதவி இயக்குனர் (விளம்பரம்-பிரசாரம்) சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-
பயிர் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆனால் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருந்தது. இதைக்கருத்தில் கொண்டு தேசிய வேளாண் சந்தை எனும் மின்னணு வேளாண் சந்தை திட்டத்தை (இ-நாம்) மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டில் தொடங்கியது. இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து, நாடு முழுவதும் 585 இடங்களில் சந்தை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 285 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 23 இடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்பட்டு வருகிறது. அதன்படி கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டில், மின்னணு வேளாண் சந்தை மூலம் நெல், வெள்ளைச்சோளம், கம்பு, எள், மக்காச்சோளம் என 834.60 மெட்ரிக் டன் விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 23 லட்சத்து 365 கிடைத்துள்ளது. இதுபோன்ற திட்டம் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வது அவசியம் ஆகும். உற்பத்தி பொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை விவசாயிகளே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். கருத்தரங்கில் தேசிய வேளாண் சந்தை குறித்த குறும்படம் ஒலிபரப்பப்பட்டது. இதில் கம்பம் வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், வியா பாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story