மாவட்ட செய்திகள்

விவாகரத்து கோரிய மனைவியை வெட்டிக்கொன்ற அரசு பஸ் டிரைவர் + "||" + Divorced wife vetti konra Government Bus driver

விவாகரத்து கோரிய மனைவியை வெட்டிக்கொன்ற அரசு பஸ் டிரைவர்

விவாகரத்து கோரிய மனைவியை வெட்டிக்கொன்ற அரசு பஸ் டிரைவர்
திண்டுக்கல் அருகே விவாகரத்து கோரிய மனைவியை அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர் வெட்டி கொன்றார். அவரது மகள் படுகாயம் அடைந்தார்.
தாடிக்கொம்பு,

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு அடுத்த கோட்டூர் ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 45). இவர் வேடசந்தூரில் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (35). இவர்களது மகள் பூவிதா (14) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில், கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். செல்வராஜ் தாடிக்கொம்பு அருணாசலம் நகரில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். சசிகலா தாடிக்கொம்பு அகரம் பிரிவில் உள்ள பெற்றோர் வீட்டில் தனது மகளுடனும் வசித்து வந்தார்.

மேலும் சசிகலா, கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி திண்டுக்கல்லில் உள்ள குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது. இது செல்வராஜிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நேற்று தாடிக்கொம்புவில் வாரச்சந்தை நடந்தது. இதற்கு சசிகலாவும், பூவிதாவும் சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வராஜ் அதில் இருந்து இறங்கி மகள் பூவிதாவையும், அதைத்தொடர்ந்து மனைவி சசிகலாவையும் சரமாரியாக வெட்டினார். இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சசிகலா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பூவிதா மிகவும் ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாடிக்கொம்பு வாரச்சந்தை அருகே கொலை நடந்ததால் ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடி விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து செல்வராஜை பிடிக்க திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள் தயாநிதி மற்றும் ஞானசேகரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தப்பி ஓடிய செல்வராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே குடகனாறு அருகே காட்டுப்பகுதியில் செல்வராஜ் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் அனாதையாக கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். எனவே செல்வராஜ் அந்த பகுதியில் எங்கேனும் பதுங்கி உள்ளாரா? என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
2. குடும்பம் நடத்த வர மறுத்ததால், மனைவி கழுத்தை அறுத்து கொலை - தொழிலாளி வெறிச்செயல்
மல்லூர் அருகே குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. திருப்பத்தூர் அருகே, மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை
திருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
4. குடும்ப தகராறில், மனைவியை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை - தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
5. நடத்தையில் சந்தேகம் , மனைவியை கொன்ற தொழிலாளி கைது
குண்டடம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-