நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு
நீலாங்கரை அருகே, ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து 1964-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி சிறிய ரக போர் விமானத்தை, அதிகாரிகளுக்கு தெரியாமல் மெக்கானிக் ஒருவர் இயக்கியதாக தெரிகிறது.
நீலாங்கரை அருகே நடுவானில் பறந்து சென்றபோது, விமானத்தை தரை இறக்க தெரியாமல் நீலாங்கரையில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் நடுக்கடலில் அந்த போர் விமானம் விழுந்ததாகவும், அதில் பயணம் செய்த மெக்கானிக்கை அப்போது அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் உயிருடன் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விமானம் கிடைக்கவில்லை.
நடுக்கடலில் விழுந்து மூழ்கிய போர் விமானத்தை புதுச்சேரியில் உள்ள நீர்மூழ்கி பயிற்சியாளர் அரவிந்த் தலைமையில் நீலாங்கரை மீனவ பகுதியை சேர்ந்த சந்துரு உள்பட 4 பேர் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக தேடி வந்தனர்.
கண்டுபிடிப்பு
இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி நீலாங்கரையில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்தில் ஆழ்கடலில் தேடியபோது சுமார் 14 மீட்டர் ஆழத்தில் கடந்த 1964-ம் ஆண்டு விழுந்த சிறியரக போர் விமானத்தின் பாகங்கள் புதைந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.
55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அந்த போர் விமானத்தின் பாகங்களை, கேமராவில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
அந்த விமானத்தின் பாகங்களை கடலில் கடந்த 10 ஆண்டுகளாக தேடி வந்தாலும், இவர்களின் இந்த தேடுதலுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்புதான் அரசு அனுமதி அளித்ததாக கடலில் மூழ்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story