சென்னையில் இருந்து துபாய்க்கு செருப்பில் மறைத்து ரூ.13½ லட்சம் அமெரிக்க டாலர் கடத்த முயற்சி
சென்னையில் இருந்து துபாய்க்கு செருப்பில் மறைத்து கடத்த முயன்ற ரூ.13½ லட்சம் அமெரிக்க டாலர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் விமானத்தில் பெரும் அளவில் பணம் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாய்க்கு சுற்றுலா விசாவில் செல்ல சென்னையை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர்.
செருப்பில் அமெரிக்க டாலர்
அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதித்தபோதும் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் அவர் அணிந்து இருந்த செருப்பு வழக்கத்தைவிட சற்று பெரிதாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர் அணிந்து இருந்த 2 செருப்பையும் வாங்கி அறுத்து பார்த்தபோது, செருப்புக்கு உள்ளே அமெரிக்க டாலர்கள் மறைத்து வைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ரூ.13½ லட்சம் மதிப்பு
அவரிடம் இருந்து ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் அமெரிக்க டாலரை அவர் யாருக்காக சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்றார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்?. அது ஹவாலா பணமா? என்பது குறித்து பிடிபட்ட வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story