ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்றவர் கைது


ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்றவர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2019 11:00 PM GMT (Updated: 21 Feb 2019 9:26 PM GMT)

சூளேஸ்வரன் பட்டியில் ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து விற்ற ஒருவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

பொள்ளாச்சி,

தமிழக-கேரள எல்லையோரத்தில் பொள்ளாச்சி பகுதி அமைந்து உள்ளதால், இங்கிருந்து கேரளாவுக்கு அதிகளவு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகின்றது. இதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி பகுதியில் உள்ள மாவு அரைக்கும் தொழிற்சாலைகளில் ரேஷன் அரிசி வாங்கி அரைப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலின் பேரில் பறக்கும் படை தாசில்தார் கணேசன், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் சூளேஸ்வரன்பட்டியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ரேஷன் அரிசியை மாவாக அரைத்து மாட்டு தீவனத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவர், அழகாபுரி வீதியை சேர்ந்த மதனகோபாலன் (வயது 45) என்பது தெரியவந்தது. இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய் தனர். இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் மேற்பார்வையில் சூளேஸ்வரன்பட்டியில் உள்ள தொழிற்சாலையில் சோதனை நடத்தியதில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மதனகோபால் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா ரேஷன் அரிசியை, அவர் ரூ.5 கொடுத்து வாங்கி உள்ளார்.

பின்னர் அதை தொழிற்சாலையில் வைத்து மாவாக அரைத்து மாட்டு தீவனத்திற்கு விற்பனை செய்துள்ளார். ரேஷன் அரிசியை வாங்குவது மட்டுமல்ல விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். எனவே சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அரிசியை விற்பனை செய்யும் நபர்களின் ரேஷன் கார்டை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story