பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
விருத்தாசலத்தில் பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
விருத்தாசலம்,
விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள அகரஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன் செந்தில் (வயது 34), விவசாயி. நாராயணசாமி ஓட்டிமேடு கிராம எல்லையில் உள்ள தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை தனது மனைவி முத்தம்மாள், மகன்கள் செந்தில், ரவி, சேகர் ஆகியோருக்கு பாகப்பிரிவினை செய்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் செந்தில் அந்த நிலத்தை தனது தாய் முத்தம்மாள், சகோதரர்கள் ரவி, சேகர் ஆகியோர் பெயரில் பட்டா மாற்றம் செய்ய ஓட்டிமேடு கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் கம்மாபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ்(28) என்பவரை சந்தித்து, பட்டா மாற்றம் செய்து தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தராஜ், பட்டா மாற்றம் செய்து தரவேண்டுமானால் தனக்கு லஞ்சமாக ரூ.35 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு செந்தில் தற்போது தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். ஆனால் ஆனந்தராஜ், பணம் கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்து தருவேன் என்று கறாராக கூறி விட்டார். இதையடுத்து செந்தில் ஓரிரு நாட்களில் பணத்தை கொண்டு வருவதாக கூறிச்சென்றார்.
இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில், இதுபற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய ஆலோசனையில் பேரில் ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்துடன் செந்தில், விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்த ஆனந்தராஜிடம் தற்போது முதல் தவணையாக ரூ.5 ஆயிரம் கொண்டு வந்துள்ளதாகவும், மீதி தொகையை இன்னும் சிறிது நாட்களில் தருவதாகவும் கூறினார். இதையடுத்து ஆனந்தராஜ் ரூ.5 ஆயிரத்தை செந்திலிடம் இருந்து வாங்கினார். அந்த சமயத்தில் அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் சிங், இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், திருவேங்கடம், மாலா மற்றும் போலீசார் ஆனந்தராஜை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story