கேரள அரசின் 1000-வது நாள் கொண்டாட்டம்: ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை


கேரள அரசின் 1000-வது நாள் கொண்டாட்டம்: ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை
x
தினத்தந்தி 22 Feb 2019 4:15 AM IST (Updated: 22 Feb 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்த கேரள அரசின் 1000-வது நாள் கொண்டாட்டத்தையொட்டி அங்கு ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட இடங்களை கேரள துறைமுகம் மற்றும் தொல்லியல் துறை மந்திரி கடனம்பள்ளி ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

தக்கலை,

பத்மநாபபுரம் அரண்மனை சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அரண்மனையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுப்பிக்கும் பணிகளை அரசு மேற்கொண்டது.

இதற்காக கேரள அரசு ரூ.3 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது. இதில் முதல் கட்டமாக பயணிகளுக்கு டிக்கெட் கவுண்டர், ஓய்வு அறை உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளும் சென்று பார்வையிடும் வகையில் அரண்மனையில் உள்புற பகுதிகளை திரையில் காண்பிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கேரள மன்னருக்கு 262 ஆண்டுகளுக்கு முன் சீனப்பயணி பரிசாக வழங்கிய கடிகாரமும் அரண்மனையில் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த 37 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த இந்த கடிகாரம் இப்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல், ஒகி புயலால் பாதிப்புக்கு உள்ளான ஊட்டுபுரை, பால்புரை மாளிகை, ஆகியவையும் சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதுப்பிக்கும் பணிகள் முடிந்த பகுதிகளின் திறப்பு விழாவும், கேரள அரசின் 1000-வது நாள் கொண்டாட்டமும் நேற்று பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு பாறசாலை எம்.எல்.ஏ. ஹரீந்திரன் தலைமை தாங்கினார். அரண்மனை கண்காணிப்பாளர் அஜித்குமார் வரவேற்று பேசினார்.

கேரள துறைமுகம் மற்றும் தொல்லியல் துறை மந்திரி கடனம்பள்ளி ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி சீரமைப்பு பணிகள் முடிந்த பகுதிகளை மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர், அரண்மனை ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குமரி மாவட்ட தலைவர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story