இணையதளத்தில் பெண் போல் கணக்கு தொடங்கி ஆண்களிடம் ஆபாச புகைப்படங்களை பெற்று பணம் பறிக்க முயற்சி
இணையதளத்தில் பெண் போல் கணக்கு தொடங்கி ஆண்களிடம் ஆபாச புகைப்படங்களை பெற்று பணம் பறிக்க முயன்ற இறைச்சி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
துமகூரு மாவட்டம் சிராவை சேர்ந்தவர் பிரக்யாக் வினய்(வயது 32). இவர் அப்பகுதியில் இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் பிரக்யாக் வினய் டேட்டிங் என்ற இணையதளத்தில் பெண் பெயரில் கணக்கு தொடங்கி உள்ளார். மேலும் அழகான பெண்ணின் படத்தை முகப்பு படமாக வைத்து உள்ளார். இதனை தொடர்ந்து அவர் டேட்டிங் இணையதளத்தில் பல ஆண்களுடன் பேசி வந்து உள்ளார்.
இந்த நிலையில் தன்னுடன் பேசும் ஆண்களிடம், ஆபாச புகைப்படங்களை அனுப்பும்படி பிரக்யாக் வினய் கேட்டு உள்ளார். அதன்படி சிலரும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி உள்ளனர்.
பணம் கேட்டு மிரட்டல்
இந்த நிலையில் ஆபாச புகைப்படங்களை அனுப்பியவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய பிரக்யாக் வினய், உங்களது ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன். அப்படி வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டி பணம் பறித்து உள்ளார்.
இதுதொடர்பாக ஒருவர் பெங்களூரு மாநகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிரக்யாக் வினய் பெண் போல் நடித்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யவும், கடனை அடைப்பதற்கும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
Related Tags :
Next Story