ரூ.3 ஆயிரம் லஞ்சம் தாசில்தார், தலையாரிக்கு 3 ஆண்டு சிறை - சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு


ரூ.3 ஆயிரம் லஞ்சம் தாசில்தார், தலையாரிக்கு 3 ஆண்டு சிறை - சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 22 Feb 2019 4:15 AM IST (Updated: 22 Feb 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

லஞ்சம் வாங்கிய வழக்கில் தாசில்தார், தலையாரிக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிவகங்கை,

ராமேசுவரத்தில் கடந்த 2004-ம் ஆண்டு தாசில்தாராக பணியாற்றியவர் சவுந்தரராஜன். அவரிடம் வெளிச்சம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் மீன்வளர்ப்பு தொழில் தொடர்பாக அனுமதி கோரி ஒரு விண்ணப்பம் அளித்தார். இந்தநிலையில் அதற்கான அனுமதியை வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சமாக வழங்கும்படி தாசில்தார் சவுந்தரராஜன் மற்றும் தலையாரி நாகரத்தினம் ஆகியோர் கேட்டார்களாம். அதற்கு கருப்பையா தயங்கியதால், பின்பு இருவரும் ரூ.5 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளனர். இதுகுறித்து கருப்பையா ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதைத்தொடர்ந்து போலீசார் ஏற்பாட்டில் கடந்த 18.9.2004 அன்று ரூ.3 ஆயிரத்தை, தாசில்தார், தலையாரியிடம் கருப்பையா கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தார் சவுந்தரராஜன் மற்றும் தலையாரி நாகரத்தினம் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட தாசில்தார் சவுந்தரராஜன், தலையாரி நாகரத்தினம் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story