மைசூரு உயிரியல் பூங்காவுக்கு உட்பட்ட காரஞ்சி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்


மைசூரு உயிரியல் பூங்காவுக்கு உட்பட்ட காரஞ்சி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Feb 2019 3:57 AM IST (Updated: 22 Feb 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு உயிரியல் பூங்காவுக்கு உட்பட்ட காரஞ்சி ஏரியில் தண்ணீர் குறைந்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏரியில் நீர்மட்டத்தை உயர்த்த, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

மைசூரு டவுனில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் காரஞ்சி ஏரியும் ஒன்று. இந்த ஏரியை மைசூரு சாமராஜேந்திரா உயிரியல் பூங்கா நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த ஏரி வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாகவும் விளங்குகிறது. மைசூரு உயிரியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த ஏரியில் பறவைகளை கண்டு ரசிப்பதுடன் படகு சவாரி செய்தும் மகிழ்ந்து வருகிறார்கள்.

தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால், காரஞ்சி ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் உயிரியல் பூங்கா நிர்வாகம் கடந்த 8-ந்தேதி முதல் காரஞ்சி ஏரியில் படகு சவாரிக்கு தடை விதித்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தண்ணீர் நிரப்ப முடிவு

கோடை கால விடுமுறையை முன்னிட்டு மைசூரு உயிரியல் பூங்காவுக்கும், காரஞ்சி ஏரி பகுதிக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுப்பார்கள். ஏரியில் நீர் இல்லை என்றால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவார்கள். எனவே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ஏரியை மேம்படுத்த மைசூரு உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதாவது சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை காரஞ்சி ஏரியில் நிரப்ப ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து மைசூரு உயிரியல் பூங்கா செயல் இயக்குனர் அஜித் எம்.குல்கர்னி கூறியதாவது:-

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்

ஏரியின் இயற்கை சூழலை பாதுகாக்க நாங்கள் விரும்புகிறோம். அதனால் வண்டல் மணலை அகற்றுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை. ஏனெனில் இந்த ஏரியில் தாவரங்கள், விலங்கினங்கள், நீர்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன. ஏரியை தூர்வாரினால் தொட்டிபோல காட்சி தரும். இது படகு போக்குவரத்துக்கு நல்லது தான். நாங்கள் ஏரியில் தண்ணீர் நிரப்ப விரும்புகிறோம். சில குறிப்பிட்ட இடங்களில் ஏரியின் அழகிற்கு இடையூறு ஏற்படாத வகையில் தூர்வாரவும் திட்டமிட்டுள்ளோம்.

காரஞ்சி ஏரியில் தண்ணீர் நிரப்புவது தொடர்பாக சமீபத்தில் மைசூரு மாநகராட்சி அதிகாரிகள், உயிரியல் பூங்கா நிர்வாகம் மற்றும் அது சார்ந்த துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது மைசூரு வித்யாரண்யாபுரத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஏரியில் நிரப்ப வாய்மொழியாக ஒரு அனுமதி கோரப்பட்டது. இந்த வித்யாரண்யாபுரத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து ஏற்கனவே குதிரை பந்தய மைதானம், கோல்ப் கிளப் ஆகியவற்றுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மைசூரு மாநகராட்சி அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்துள்ள னர்.

ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்

நாங்கள் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் மாதிரியை கர்நாடக மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு அனுப்பி உள்ளோம். அதனை பரிசோதித்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீைர நிரப்புவதால் ஏரியின் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துமா? எனவும், தண்ணீரின் தரம் குறித்தும் சான்றளிக்கும். அதுபோல் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில் உள்ள ஆக்சிஜன் மற்றும் வேதிப்பொருளின் அளவு குறித்தும் தெரிவிக்கும். விரைவில் மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வு அறிக்கை கிடைக்கும்.

கர்நாடக மாசு கட்டுப்பாடு வாரிய ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகு, மைசூரு மாநகராட்சிக்கு முறைப்படி இதற்காக திட்ட அறிக்கை அனுப்பப்படும். 3 அடி விட்டம் உள்ள குழாய்கள் மூலம் வித்யாரண்யாபுரம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து சாமுண்டிமலை அடிவாரம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் தண்ணீர் கொண்டுவரப் படும்.

ரூ.3 கோடி நிதி

அங்கிருந்து ராஜகால்வாயில் தண்ணீர் விடப்படும். அந்த தண்ணீர் 2½ கி.மீ. தூரம் பாய்ந்தோடி ஏரியில் கலப்பதால், இயற்கையாகவே தண்ணீர் மேலும் சுத்திகரிக்கப்படும். ராஜகால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுவதால், இயற்கை நீராகவே ஏரியில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் திட்டம் இன்றும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மைசூரு மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் கூறுகையில், “காரஞ்சி ஏரிக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து தண்ணீர் நிரப்ப தயாராக இருக்கிறோம். இந்த திட்டத்திற்கான செலவு, குழாய்கள், மோட்டார்கள், பராமரிப்பு பணிகளை உயிரியல் பூங்கா நிர்வாகம் மேற்கொள்ளும். இதில் எங்களது பங்கு தண்ணீர் வழங்குவது மட்டுமே” என்றார்.

Next Story