பரேல் ரெயில் முனையத்தில் இருந்து 3-ந் தேதி முதல் மின்சார ரெயில் சேவை ரெயில்வே முடிவு
பரேல் ரெயில் முனையத்தில் இருந்து வருகிற 3-ந் தேதி முதல் மின்சார ரெயில் சேவையை தொடங்க மத்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது.
மும்பை,
தென்மும்பையின் முக்கிய வணிக பகுதிகளில் ஒன்றாக விளங்கும் பரேலுக்கு தினசரி ரெயில் மார்க்கமாக சுமார் 3½ லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். இதை கருத்தில் கொண்டும், மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேயின் சந்திப்பு நிலையமாக விளங்கும் தாதர் ரெயில் நிலையத்தில், பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் பரேலில் புதிய ரெயில் முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி ரூ.51 கோடி செலவில் பரேல் ரெயில் நிலையத்தில் புதிய ரெயில் முனையம் அமைக்கப்பட்டு உள்ளது.
3-ந் தேதி முதல் சேவை
பரேல் ரெயில் முனைய பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அது பயன்பாட்டிற்கு வருவதை பயணிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில், அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி பரேல் ரெயில் முனையத்தை திறக்க மத்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது. பரேல் ரெயில் முனையத்தை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரேலில் இருந்து கல்யாண் செல்லும் மார்க்கத்தில் தினசரி 20 மின்சார ரெயில் சேவைகளை இயக்க திட்டமிட்டு உள்ளதாகவும் மத்திய ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story