சேடபட்டி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, ஆசிரியருக்கு அடி-உதை
சேடபட்டி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு அடி-உதை விழுந்தது. மேலும் ஆசிரியரை கைது செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்கும் சில மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாகவும், வெளியில் சொன்னால் பள்ளியை விட்டே வெளியேற்றி விடுவேன் என்று கூறி மிரட்டியதாகவும் தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று மாணவிகள் மற்றும் அவர் களது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஆசிரியரை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.
தகவலறிந்த உசிலம்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி முத்தையா, பேரையூர் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி தலைமையிலான போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் போலீசார், அந்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். இதற்காக அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த ஜீப்பை முற்றுகையிட்டதோடு அவரை தாக்க முயன்றனர்.
இதனால் போலீசார் மீண்டும் பள்ளி வகுப்பறைக்குள் ஆசிரியரை அழைத்து சென்று விட்டனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து ஆசிரியரை பள்ளியில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த ஆசிரியரை சுற்றிவளைத்து அடித்து உதைத்தனர். போலீசார் அவரை மீட்டு சேடபட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story