சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவி எந்த கட்சிக்கு என்பது ரகசியம் தேவேந்திர பட்னாவிஸ் பதில்
சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது ரகசியம் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை,
நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் இணைந்தன. மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா 25 இடங்களிலும், சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிடுவது என முடிவானது.
இதேபோல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் மராட்டிய சட்டமன்ற தொகுதிகளிலும் இரு கட்சிகளும் சரிசமமான இடங்களில் போட்டியிட முடிவு செய்தன. ஆனால் முதல்-மந்திரி பதவி எந்த கட்சிக்கு என்பது அறிவிக்கப்படவில்லை.
மீண்டும் மோதல்
தேர்தல் கூட்டணி முடிவான 2 நாட்களில் முதல்-மந்திரி பதவி எந்த கட்சிக்கு என்பதில் சிவசேனா மந்திரி ராம்தாஸ் கதம், பா.ஜனதா மூத்த மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோரிடையே கருத்து மோதல் வெடித்தது. முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக சிவசேனா மந்திரியும், அதெல்லாம் இல்லை, எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்த கட்சிக்கு தான் முதல்-மந்திரி பதவி என்று பா.ஜனதா மந்திரியும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் மும்பையில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக ருசிகரமான கேள்விகளை கேட்டார். இதற்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் சாமர்த்தியமாக பதிலளித்தார்.
யார் முதல்-மந்திரி?
பா.ஜனதா, சிவசேனா கூட்டணியில் எந்த கட்சிக்கு முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முதல்-மந்திரி பட்னாவிஸ், “சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். அனைத்து முடிவுகளையும் தற்போது வெளியிட முடியாது” என்றார்.
மேலும் சிவசேனாவுடன் கூட்டணி ஏற்பட்டதால், பா.ஜனதா தொண்டர்களிடம் அதிருப்தி நிலவுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த அவர், “தற்போதைய சூழ்நிலையில் இயற்கைக்கு மாறான கட்சிகள் ஒன்றிணைந்து எங்களுக்கு எதிராக போட்டியிட உள்ளன. இந்த நிலையில் நீண்டநாள் தோழமை கட்சியான சிவசேனாவுடன் நாங்கள் கூட்டணி அமைப்பது இயல்பானது.
எங்கள் கட்சி தொண்டர்கள் இதை புரிந்துகொண்டுள்ளனர். எங்கள் முடிவுக்கு ஆதரவும் கொடுத்து வருகின்றனர்” என்றார்.
Related Tags :
Next Story