திருவண்ணாமலை மாவட்டத்தை 100 சதவீத தமிழ் கற்றல் மாவட்டமாக மாற்ற ஆசிரியர்கள் உறுதி ஏற்க வேண்டும் முதன்மை கல்வி அலுவலர் பேச்சு


திருவண்ணாமலை மாவட்டத்தை 100 சதவீத தமிழ் கற்றல் மாவட்டமாக மாற்ற ஆசிரியர்கள் உறுதி ஏற்க வேண்டும் முதன்மை கல்வி அலுவலர் பேச்சு
x
தினத்தந்தி 23 Feb 2019 3:45 AM IST (Updated: 22 Feb 2019 9:47 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தை 100 சதவீத தமிழ் கற்றல் மாவட்டமாக மாற்ற ஆசிரியர்கள் உறுதி ஏற்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கல்வி அலுவலர்கள் அருட்செல்வன், கந்தசாமி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் பேசியதாவது:-

உலகத்தில் பேசப்படும் சுமார் 6 ஆயிரம் மொழிகளில் தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளுக்கு மட்டுமே உயர்தர செம்மொழி சிறப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி 6 மொழிகளிலும் தமிழ் முதன்மையாக இருப்பதை உலகமே பாராட்டுவதை நாம் பெருமையோடு எண்ணிப் பார்த்து நமது தாய்மொழியாம் தமிழை பாதுகாக்க நாம் பெருமுயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தனது தாய்மொழியான தமிழைக் கற்றுக்கொண்டால் வேறு எந்தவொரு தீய பழக்கத்திற்கும் அடிமையாக மாட்டார்கள். தமிழைக் கற்றுக்கொண்டவர்கள் ஒழுக்க சீலர்களாக இருப்பார்கள்.

தாய்மொழியில் கற்பது குறைந்தால் மற்ற தீயசக்திகள் எல்லாம் நம்மை ஆட்கொண்டுவிடும். எனவே, மாணவர்கள் தமிழ்மொழியில் செம்மையாக வாசிக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்கள் தீய சக்திக்கு அடிமையாவதைக் கண்டறிந்து அவர்களை ஆசிரியர்கள் நல்வழிபடுத்த வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் தமிழ் கற்ற மாவட்டமாக மாற்றுவது ஆசிரியர்களின் கடமையாகும். திருவண்ணாமலை மாவட்டத்தை 100 சதவீதம் தமிழ் கற்றல் மாவட்டமாக மாற்ற ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் ‘தமிழ் வாழ்க’ என்ற பெயர் பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் படிக்கத் தெரியாத மாணவருக்கு அனைத்து குறுவளமையங்களிலும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெருமை வாய்ந்த தமிழ்மொழியை காக்க அனைத்துப் பள்ளிகளிலும் பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு மாணவர்களின் தமிழ் கற்றல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story