சிறையில் போலீசார் துன்புறுத்துவதாக கூறி பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை முயற்சி சேலம் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு
சிறையில் போலீசார் துன்புறுத்துவதாக கூறி சேலம் கோர்ட்டு வளாகத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் குப்பண்ண கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(வயது 30). கடந்த 2010–ம் ஆண்டு நங்கவள்ளி பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதுதவிர அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு விசாரணை சேலம் சிறார் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று காலை ஆயுதப்படை போலீசார் 2 பேர் சுந்தர்ராஜனை மத்திய சிறையில் இருந்து சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் ஷூ அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் கைதியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது சுந்தர்ராஜன் திடீரென ஷூவில் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் இடது கையிலும் கீறிக்கொண்டார். மேலும் அவர் பிளேடை தனது வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டார். இதனால் வாய், கழுத்து, கை ஆகிய இடங்களில் இருந்து ரத்தம் வெளியேறியது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்புக்கு சென்ற போலீசார் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்கொலைக்கு முயன்றது குறித்து சுந்தர்ராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரிடம் அவர், சிறையில் கஞ்சா மற்றும் செல்போன் வைத்திருப்பதாக கூறி போலீசார் தன்னை துன்புறுத்துவதாகவும், சரியாக உணவு வழங்குவதில்லை என்றும் கூறியதாக கூறப்படுகிறது. வேறு ஒரு வழக்கு ஒன்றில் சுந்தர்ராஜன் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை வழக்கு கைதி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பத்தால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.