ஓய்வுபெற்ற ஆசிரியரை கடத்தி கொன்ற 6 பேருக்கு ஆயுள் தண்டனை
ஓய்வுபெற்ற ஆசிரியரை கடத்தி கொன்ற 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி கர்ணாவூரை சேர்ந்தவர் ஜோசப் ரத்தினகுமார்(வயது 62), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி ரோஸ்லின் ஆனந்தி(48). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜோசப் ரத்தினகுமாருக்கும், அதே பகுதியில் வசிக்கும் உறவினர் பெஞ்சமின்(65) என்பவருக்கும் சொத்து பிரச்சினை சம்பந்தமாக முன்விரோத தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 7.5.2017 அன்று ரோஸ்லின் ஆனந்தி தனது மகள் மற்றும் மகனுடன் கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டார். ஜோசப் ரத்தினகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இது பற்றி அறிந்ததும் பெஞ்சமின், அவரது மகன்கள் அறிவழகன்(34), இளையராஜா(35), குமார்(28), ராமர் மகன் செந்தில்(30), செல்வராஜ் மகன் நித்தியராஜ்(36), அன்பழகன் மகன் ஆனந்த்(30), அறிவழகன் மனைவி சரஸ்வதி(33) ஆகியோர் ஆட்டோவில் ஜோசப் ரத்தினகுமார் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவர்கள், அவரை அடித்து, உதைத்து ஆட்டோவில் கடத்தி சென்றனர்.
அதே பகுதியில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்றதும், ஆட்டோ நிறுத்தப்பட்டது. அங்கு ஜோசப் ரத்தினகுமாரை தாக்கி, மிரட்டி பத்திரத்தில் அவர்கள் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதையடுத்து 8 பேரும் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்து விட்டு, உடலை அவரது வீட்டின் வாசலில் போட்டுவிட்டு சென்றனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து ரோஸ்லின் ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெஞ்சமின் உள்ளிட்ட 8 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி கூடுதல் 3-வது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி நீதிபதி செல்ல முத்துக்குமாரி தனது தீர்ப்பில், ஜோசப் ரத்தினகுமாரை கொலை செய்த அறிவழகன், இளையராஜா, செந்தில், நித்தியராஜ், ஆனந்த், சரஸ்வதி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், சரஸ்வதிக்கு ரூ.4 ஆயிரம் அபராதமும், மற்றவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைதான பெஞ்சமின், குமார் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் நிர்மல் சுபசந்திரன் ஆஜராகி வாதாடினார்.
இதை தொடர்ந்து சரஸ்வதி வேலூர் பெண்கள் சிறையிலும், மற்ற 5 பேரும் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story