நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.ம.மு.க. காணாமல் போய்விடும் - குமரகுரு எம்.எல்.ஏ. பேச்சு


நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.ம.மு.க. காணாமல் போய்விடும் - குமரகுரு எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 23 Feb 2019 4:15 AM IST (Updated: 22 Feb 2019 11:00 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.ம.மு.க. காணாமல் போய்விடும் என்று குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தில் முகையூர் ஒன்றிய அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளர் சந்தோஷ், கூட்டுறவு சங்க தலைவர்கள் அந்தோணிபெர்லின், சீனுவாசன், நாதன்காடுவெட்டி கிளை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பையூர் கூட்டுறவு சங்க தலைவர் மாரங்கியூர் எம்.இளங்கோவன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஜெயலலிதா இல்லாமல் நாம் சந்திக்கும் முதல் தேர்தல். இவற்றில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஜெயலலிதாவின் வழியில் இந்த ஆட்சி மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே வாக்குச்சாவடி முகவர்களாகிய நீங்கள் ஒற்றுமையாக செயல்பட்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி அடைய கடுமையாக பாடு படவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

அதைத்தொடர்ந்து குமரகுரு எம்.எல்.ஏ. பேசியதாவது-

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகளின் பணி எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கமாக எடுத்து கூறியுள்ளார். அவரின் ஆலோசனையின்படி கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச்செய்யவேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. தான் பெரிய இயக்கம். குறிப்பாக அ.தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணியை பார்த்து நம்மையும் சேர்த்துக்கொள்வார்களா? என பலர் ஏங்கி தவிக்கின்றனர். ஏனென்றால் அ.தி.மு.க அணியில் சேர்ந்தால் வெற்றி உறுதி என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய் கழகத்துக்கு தினமும் வந்த வண்ணம் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.ம.மு.க. காணாமல் போய்விடும். தமிழக அரசியலில் இருந்து டி.டி.வி.தினகரனும் காணாமல் போய் விடுவார்.

இவ்வாறு குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.

கூட்டத்தில் கிளை செயலாளர்கள் முருகன், ரவிச்சந்திரன், டாக்டர் சிவநாதன், ஊராட்சி செயலாளர் குணசேகர், ஆறுமுகம், பங்கான், கலியமுர்த்தி, அய்யப்பன், சந்தோஷ், ஒன்றிய பூத் கமிட்டி நிர்வாகி துரை, மாவட்ட பிரதிநிதி மோகன்ராஜ், ஜோதி என்கிற அந்தோணியம்மாள், சரவணன், மத்யேயூ, வக்கீல் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் ஆதி.மூர்த்தி நன்றி கூறினார். 

Next Story