ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு: தர்மபுரியில் ஆறுபோல் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்


ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு: தர்மபுரியில் ஆறுபோல் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
x
தினத்தந்தி 23 Feb 2019 4:15 AM IST (Updated: 22 Feb 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தர்மபுரியில் ஆறுபோல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

தர்மபுரி,

தர்மபுரி–பென்னாகரம் சாலையில் பைபாஸ் சாலை மேம்பாலம் அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் அமைந்துள்ளது. ஒகேனக்கல்லில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர் இந்த பகுதியில் இருந்து தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு குடியிருப்புகளுக்கு பிரித்து வினியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த பிரதான குடிநீர் குழாயில் நேற்று மாலை திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த குழாயில் இருந்து மிகவேகமாக ஒகேனக்கல் குடிநீர் வெளியேறி ஓடத்தொடங்கியது. சிறிது நேரத்தில் அந்த பகுதியில் ஆறுபோல் ஒகேனக்கல் குடிநீர் கரைபுரண்டு ஓடியது. அந்த வழியாக வந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஒகேனக்கல் குடிநீர் திட்ட அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து குடிநீர் குழாய் உடைப்பை பார்வையிட்ட அலுவலர்கள் தண்ணீரை நிறுத்துவதற்கான பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் சுமார் 2 மணி நேரம் மேலாக அந்த பகுதியில் ஒகேனக்கல் குடிநீர் ஆறுபோல் கரைபுரண்டு ஓடியது. ஆயிரக்கணக்கான கனஅடி குடிநீர் பள்ளமான பகுதியை நோக்கி ஓடி அருகே உள்ள ஏரிக்குள் நுழைந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் குழாய் உடைப்பில் இருந்து குடிநீர் வெளியேறுவது கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒகேனக்கல் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.


Next Story