கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு ஒத்திவைப்பு, முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி விண்ணப்பதாரர்கள் திடீர் போராட்டம்
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி விண்ணப்பதாரர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிடங்களை மாவட்ட இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டு அந்தந்த இணை இயக்குனர் அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்படும் எனவும், இதற்கு 10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் கால்நடைகள் வளர்ப்பு மற்றும் சைக்கிள் ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் 114 காலிப்பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களில் தகுதியான 15,780 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இதற்கான நேர்முகதேர்வு 22-ந் தேதி (நேற்று) நடைபெறுவதாக இருந்த நிலையில் நிர்வாக காரணங்களினால் மறுதேதி குறிப்பிடப்படாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தாததால் நேற்று காலை அழைப்பாணை கடிதத்துடன் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் குவிந்தனர்.
அப்போது அங்கு நேர்முகதேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்த தகவலை ஏன் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கூறி அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததோடு அந்த அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நிர்வாக காரணங்களால் நேர்முக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மீண்டும் தேர்வு நடைபெறுவது குறித்து முன்னதாக தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதன்பேரில் அவர்கள் அனைவரும் அங்கிருந்து ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story