கால்நடை பராமரிப்பு துறை பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டதால் சாலைமறியல் வேலகவுண்டம்பட்டி அருகே பரபரப்பு


கால்நடை பராமரிப்பு துறை பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டதால் சாலைமறியல் வேலகவுண்டம்பட்டி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 23 Feb 2019 3:45 AM IST (Updated: 22 Feb 2019 11:40 PM IST)
t-max-icont-min-icon

வேலகவுண்டம்பட்டி அருகே கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டதால், நேர்காணலுக்கு வந்தவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மணிக்கட்டிப்புதூரில் உள்ள ஒரு கல்லூரியில் நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 48 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் 22-ந்தேதி (நேற்று) முதல் 28-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்தநிலையில் நிர்வாக காரணம் கருதி தற்காலிகமாக நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும், மீண்டும் நேர்காணல் நடத்துவது மற்றும் பணி நியமனம் வழங்குவது தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்திருந்தார்.

இதனால் நேற்று நேர்காணலுக்கு வந்த 100-க்கும் மேற்பட்டோர் திடீரென மணிக்கட்டிப்புதூர் தனியார் கல்லூரி அருகே நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் நேர்காணலுக்கு வந்தவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர்.மறியல் போராட்டம் காரணமாக நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

Next Story