பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட கோகுல்ராஜின் தோழி சுவாதி நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்
பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட கோகுல்ராஜின் தோழி சுவாதி நாமக்கல் கோர்ட்டில் ஆஜரானார்.
நாமக்கல்,
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவரது கொலை வழக்கு தொடர்பான சாட்சி விசாரணை நாமக்கல் முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், கோகுல்ராஜின் தோழி சுவாதி உள்பட பலர் சாட்சியம் அளித்து உள்ளனர்.
இந்த வழக்கில் கோகுல்ராஜின் கல்லூரி தோழி சுவாதி அரசு தரப்பில் முக்கிய சாட்சியாக கருதப்பட்டு வந்தார். ஆனால் அவர் பிறழ் சாட்சி அளித்து விட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சார்பில் நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய மாஜிஸ்திரேட்டு தனபால், கோகுல்ராஜின் தோழியான சுவாதி பிப்ரவரி 11-ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். ஆனால் 11-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சுவாதி ஆஜராகவில்லை. அதேபோல் கடந்த 20-ந் தேதி மாஜிஸ்திரேட்டு வடிவேல் முன்னிலையில் மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் சுவாதி ஆஜராகவில்லை. எனவே அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்ததோடு, வழக்கை மார்ச் மாதம் 12-ந் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு வடிவேல் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரண்டாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி முன்னிலையில் சுவாதி ஆஜராகி, கடந்த முறை வழக்கில் ஆஜராகாமல் இருந்தது குறித்து விளக்கம் அளித்தார். இதையடுத்து பிடிவாரண்டை ரத்து செய்து, மார்ச் மாதம் 12-ந் தேதி ஆஜராகும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story