கஜா புயலால் பாதித்த வாழை, பலா, தேக்கு மரங்களுக்கு உடனடியாக நிவாரணம் விவசாயிகள் வலியுறுத்தல்


கஜா புயலால் பாதித்த வாழை, பலா, தேக்கு மரங்களுக்கு உடனடியாக நிவாரணம் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Feb 2019 4:30 AM IST (Updated: 23 Feb 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்டு உள்ள வாழை, பலா, தேக்கு மரங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீரமங்கலம், 

கஜாபுயலால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, புள்ளாண்விடுதி, கொத்தமங்கலம், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், மா, பலா, வாழை, தேக்கு, தென்னை உள்ளிட்ட அனைத்து வகை மரங்களும் அடியோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. புயல் பாதித்து சில நாட்களுக்கு பிறகே மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டது. இதனால் விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய குழுவினர் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டனர். மாநில அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வந்தனர். ஆனால் அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதி இளைஞர்களே மீட்பு பணிகளில் தீவிரமாக இருந்தனர். புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டு வீடு மற்றும் குடிசைகளை மறு சீரமைப்பு செய்ய அரசு நிவாரணம் வழங்கப்படும் எனவும், தென்னை போன்ற அனைத்து மரங்களுக்கும், விவசாய பயிர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனாலும் ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் 30 சதவீதம் வரை பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை எனவும், உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும், சில இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல தென்னை மரங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை பல விவசாயிகளுக்கு பாதிப்புகளைவிட குறைவாக வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு உள்ளதாக கூறி வருவாய் துறைக்கும், வேளாண்துறைக்கும், மனு கொடுத்துவிட்டு விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வடகாடு, மாங்காடு, புள்ளாண்விடுதி, கருகாக்குறிச்சி, நெடுவாசல், அணவயல், கொத்தமங்கலம், கீழாத்தூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை விவசாயம் செய்யப்பட்டு இருந்தது. அந்த வாழைகள் புயலின் கோரதாண்டவத்தால் முற்றிலும் முறிந்து நாசமானது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல கீரமங்கலம் சுற்றுப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வளர்க்கப்பட்டு வந்த பலா, மா மரங்களும் ஒடிந்தும், சாய்ந்தும் விழுந்தது.

புயல் கரையை கடந்து 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் வாழை, மா, பலா, தேக்கு போன்ற மரங்களுக்கும், விளை பயிர்களுக்கும் நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மறு நடவு செய்யும் வகையில் உடனடியாக தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கஜாபுயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மரங்கள், விளை பயிர்களை அதிகாரிகள் கணக்கு எடுத்து சென்றார்கள். ஆனால் அதற்கான நிவாரணம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் அழிந்து கிடக்கும் மரங்களை, வாழைகளை வெட்டி அகற்றி மறு நடவு செய்ய முடியாமல் நாங்கள் தவித்து வருகிறோம். மேலும் கடன் வாங்கவும் வழியில்லை. அதனால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னால் மரங்களுக்கான நிவாரண தொகை வழங்கப்பட்டால் எங்களுக்கு உதவியாக இருக்கும் என்றனர்.

Next Story