எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 உள்ளிட்ட அரசு பொதுத்தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 உள்ளிட்ட அரசு பொதுத்தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு போலீஸ் நியமனம் கோரி உரிய போலீஸ் நிலையத்திற்கு கடிதம் வழங்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள், அனைத்து உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா தலைமை தாங்கி பேசியதாவது:- இந்த ஆண்டு மார்ச் 2019-ல் தொடங்க உள்ள பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வினை நமது மாவட்டத்தில் சிறப்பான முறையில் நடத்த வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கண்காணிப்பாளர்கள் வினாத்தாள் கட்டுக்காப்பு மையம், தேர்வு மையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு போலீஸ் நியமனம் கோரி உரிய போலீஸ் நிலையத்திற்கு கடிதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு நாட்களில் மின்சாரம், தீ தடுப்பு ஆகிய அலுவலகங்களுக்கு முன்கூட்டியே கடிதம் வாயிலாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
போக்குவரத்து மேலாளருக்கு தகவல் தெரிவித்து தேர்வு நாளன்று மாணவர்கள் வந்து செல்ல பஸ்கள் தடையின்றி இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரிகள் அனைத்து தேர்வு மையங்களும், வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும் நல்ல நிலையில் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் தேர்வு குறித்து வட்டார அளவில் பயிற்சி வழங்க வேண்டும். முதன்மை கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்திற்கு புதியதாக வழங்கப்பட்டு உள்ள பள்ளி எண்கள், தேர்வு மைய எண்கள் ஆகியவை சரியாக உள்ளனவா என உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு மார்ச் 2019-ல் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றிற்கு மாலை 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை தேர்வு நடைபெறுவதை மாணவர்களுக்கு நன்கு தெரிவித்து பயிற்சி அளிக்க வேண்டும். தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் தேர்விற்கு வேண்டிய அனைத்து விதமான படிவங்களையும் பதிவிறக்கம் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சிறப்பான பயிற்சி அளித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் வருகையினை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story