பொள்ளாச்சி அருகே, குடும்ப தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு


பொள்ளாச்சி அருகே, குடும்ப தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 23 Feb 2019 4:15 AM IST (Updated: 23 Feb 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனூரில் குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூரை சேர்ந்தவர் துளசிராம் பிரசாத். இவரது மகன் அமர்நாத்பிரசாத் (வயது 38). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சத்தியா (37). இவர் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் அமர்நாத் பிரசாத், சத்தியாவை காதலித்து திருமணம் செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சத்தியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அமர்நாத்பிரசாத் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த தகராறின் போது ஆத்திரத்தில் அமர்நாத்பிரசாத் அரிவாளை எடுத்து, சத்தியாவை வெட்டியதாக கூறப்படுகின்றது.

இதில் கை, கழுத்து ஆகிய இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சத்தியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அமர்நாத்பிரசாத் போலீசுக்கு பயந்து சாணிபவுடர் கரைத்து (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவரை மீட்டு அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story