சூரியசக்தி மூலம் இயங்கும் மின்மோட்டார்களை அரசு வழங்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சூரியசக்தி மூலம் இயங்கும் மின்மோட்டார்களை அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வேளாண்மை இணை இயக்குனர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், காவிரிநீர் பாசன விவசாயிகள் நல சங்க மாவட்ட தலைவர் மகாதானபுரம் ராஜாராம் பேசுகையில், மத்திய அரசானது சிறு-குறு விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதி வழங்க அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த நிதியானது ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியை பெற, வருவாய்த்துறை நில ஆவணங்களில் பட்டாவில் பெயர் இருத்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது கணினி பட்டாவாக இருப்பதால், இறந்தவர்களின் பெயர் நீக்கப்படாமல் இருத்தல், பெயர்-விவரம் பிழையுடன் பதிவாகியிருத்தல் உள்ளிட்ட குளறுபடிகள் அதில் இருக்கின்றன. இதனால் அந்த நிதியை சில விவசாயிகள் பெறமுடியாத சூழல் உள்ளது. எனவே கணினி பட்டாக்களில் குளறுபடியினை களைய வருவாய்த்துறையினர் விரைந்து செயல்பட்டு விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதி பெறுவது தொடர்பாக உரிய ஆலோசனை வழங்கிட வேண்டும். தற்போது கோடை காலம் நெருங்கி வருவதால் விவசாயிகளுக்கு சூரியசக்தி மூலம் இயங்கும் மின்மோட்டார் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சாமானிய மக்கள் நலக்கட்சி மாவட்ட செயலாளர் சண்முகம் பேசுகையில், அமராவதி ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்தார். சாயக்கழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க செயலாளர் நரிகட்டியூர் ராமலிங்கம் பேசுகையில், கரூர் நகராட்சி பாதாள சாக்கடையினுள் சாயக்கழிவுகளை சிலர் கலந்து விடும் செயலில் ஈடுபடுகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேளாண் வணிகத்துறை சார்பாக மைசூருக்கு விவசாயிகளை சுற்றுலா அழைத்து சென்று விளை பொருட்களிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது பற்றி எடுத்துரைத்தனர். இது போன்ற பயிற்சிக்கு அதிகளவு விவசாயிகளை அழைத்து செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கூட்டத்தின்போது, கரூர் அருகேயுள்ள பஞ்சப்பட்டி ஏரி, தாதம்பாளையம் ஏரி உள்பட 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் காவிரி, அமராவதி ஆற்று உபரிநீரை கொண்டு சென்று நிரப்பிட வேண்டும். காவிரி, அமராவதியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் பலரும் தெரிவித்தனர்.
அப்போது பதில் அளித்து கலெக்டர் பேசுகையில், அரசின் நிதி ஒதுக்கீட்டை பொறுத்து கரூர் மாவட்டத்தில் போதியளவு நீர்மேலாண்மையை கையாண்டு தான் வருகிறோம். தற்போது கூட மாயனூர் கதவணையை போன்று புஞ்சை புகளூரில் தடுப்பணை கட்ட ரூ.490 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இயற்கை வரன்முறைப்படி கடலுக்கும் சிறிது நீர் சென்றால் தான் சுழற்சி முறை சரியாக இருக்கும். எனவே கரூரின் முக்கிய ஏரிகளுக்கு நீர்வழிப்பாதை அமைப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான மாநில அரசின் ரூ.2,000 நிதி பெற 35 வகையான நிபந்தனைகள் உள்ளன. தற்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி 30 சதவீதம் பேர் கரூரிலிருந்து இடம் பெயர்ந்து சென்று விட்டனர். எனவே இதனையும் கணக்கிட்டு உரிய விவரம் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் தோகைமலை- ஆர்.டி.மலை பகுதிகளில் விவசாயிகளின் கால்நடைகளை வெறிநாய்கள் அடிக்கடி கடித்து செல்லும் சம்பவங்கள் நடக்கிறது. எனவே அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தோகைமலையில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர். இதில் வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி(கரூர்), லியாகத்(குளித்தலை) மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகானந்தம் மற்றும் தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, காவிரிபடுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் குளித்தலை ஜெயராமன், மொஞ்சனூர் சந்திரசேகர் உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story