நாகை அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 பேர் கைது - லாரி பறிமுதல்
நாகை அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் படி ஆணைக்காரன் சத்திரம் போலீசார் குன்னம் பெரம்பூர் பள்ளிகூடம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரி டிரைவர் குன்னம் உப்பங்காடு நடுத்தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் கவிராஜ் (வயது 29), கிளனர் குன்னம் மேல தெருவை சேர்ந்த அருளரசன் மகன் ஆகாஷ் (19) ஆகியோர் என்பதும், இவர்கள் அந்த நாகை பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ஆணைக்காரன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story