பஸ் படிக்கட்டில் பயணம் செய்தபோது தடுமாறி கீழே விழுந்ததில் மாணவனின் காலில் 3 விரல்கள் துண்டானது
கீழ்வேளூரில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தபோது தடுமாறி கீழே விழுந்ததில் மாணவனின் காலில் 3 விரல்கள் துண்டானது.
கீழ்வேளூர்,
நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை கீழ்வேளூர்-கச்சனம் வழியாக பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கச்சனம் மார்க்கமாக செல்லும் பஸ்களில் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலக பணியாளர்கள், வெளியூரில் வேலை செய்பவர்கள் என்று பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாகவே காணப்படும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு புறப்பட்டு சென்ற அரசு பஸ் சிக்கல் அருகே பழுதாகி நின்றது. இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகளை, மற்றொரு அரசு பஸ்சில் ஏற்றி விட்டனர். இதனால் அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமானது.
இதன்காரணமாக கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தனர்.
அப்போது பஸ் கீழ்வேளூர் ரெயில்வே கேட் அருகே சென்ற போது, அங்குள்ள வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியபோது படிக்கட்டில் பயணம் செய்த வலிவலத்தை அடுத்த கீரங்குடியை சேர்ந்த ராஜராஜன் மகன் அந்தோணி (வயது17) என்பவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் கட்டை விரல் உள்பட 3 விரல்கள் துண்டானது. உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்தோணி நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழித்தடத்தில் பஸ்சின் படிக்கட்டில் பயணிகள் தொங்கியபடி பயணம் செய்வதால் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. கீழ்வேளூர்-கச்சனம் மார்க்கத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story