புதிதாக கணக்கெடுப்பு நடத்தி ரூ.2 ஆயிரம் வழங்க கோரி துவாக்குடி நகராட்சி அலுவலகம் முற்றுகை


புதிதாக கணக்கெடுப்பு நடத்தி ரூ.2 ஆயிரம் வழங்க கோரி துவாக்குடி நகராட்சி அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 23 Feb 2019 3:16 AM IST (Updated: 23 Feb 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக கணக்கெடுப்பு நடத்தி ரூ.2 ஆயிரம் வழங்க கோரி துவாக்குடி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பொன்மலைப்பட்டி ,

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தொகையை பெறும் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பட்டியல்படி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு இந்த தொகை கிடைக்கும் என்று தகவல் பரவியது. அதன்படி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் 2004-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,688 பேர் வறுமை கோட்டுக்கு கீழ் வருகின்றனர். அவர்களில் இறந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள் போக மீதம் 700 பேர் மட்டுமே தற்போது உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் புதிதாக கணக்கெடுப்பு நடத்தி ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி பழனிச்சாமி தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு துவாக்குடி நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

அவர்களிடம் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி பேச்சு வார்த்தை நடத்தி இதுகுறித்து மனு எழுதி கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதன்பேரில், பொதுமக்கள் மனுக்களை எழுதி வரிசையில் நிற்காமல் முண்டியடித்து கொண்டு ஸ்ரீதேவியிடம் கொடுக்க முயன்றனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நகராட்சி ஊழியர்கள், வரிசையில் நின்று மனு கொடுங்கள் என்றனர். பின்னர், பொதுமக்கள் வரிசையில் நின்று மனு கொடுத்தனர். இந்த சம்பவம் காரணமாக நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.


Next Story