போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாமல் விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள்
அரசியல் கட்சியினர் போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாமல் விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும் என கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, திருப்பூர் மாவட்டத்தில் விளம்பர பதாகைகள் மற்றும் மின்னணு விளம்பர பதாகைகள் காட்சிப்படுத்துவது தொடர்பாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி துறைகள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
சென்னை உயர்நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டவாறு மாநிலம் முழுவதும் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அனைத்து சாலைகள், நடைபாதைகள், நடைமேடைகள் மற்றும் இணைப்பு சாலைகளில் விளம்பர பதாகைகள், மின்னணு விளம்பர பதாகைகள் வைப்பதில் உரிய வழிமுறையை பின்பற்ற வேண்டும். அனைத்து உள்ளாட்சி துறைகளுக்கும் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினர் இதனை பின்பற்ற வேண்டும்.
மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு இல்லாத வகையில் விளம்பர பதாகைகள் அமைக்க வேண்டும். இதுபோல் அவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்ற வேண்டும். விளம்பர பதாகைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, துணை போலீஸ் கமிஷனர்கள் உமா, பிரபாகரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாதனைக்குறள், மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.