பாரதிதாசன் கல்லூரி பட்டமளிப்பு விழா: மாநில வளர்ச்சிக்கு பெண்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் நாராயணசாமி வேண்டுகோள்


பாரதிதாசன் கல்லூரி பட்டமளிப்பு விழா: மாநில வளர்ச்சிக்கு பெண்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் நாராயணசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 23 Feb 2019 5:30 AM IST (Updated: 23 Feb 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநில வளர்ச்சிக்கு பெண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பாரதிதாசன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் 9–வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பூங்காவனம் வரவேற்று பேசினார்.

விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு 1,400 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது 32 மாணவிகளுக்கு தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

இந்தியா அளவில் உயர்கல்வியில் 5–வது இடத்தில் புதுச்சேரி உள்ளது. நமது மாநிலத்தை சேர்ந்த தாகூர் கலைக்கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி, கதிர்காமம் அரசு கலைக்கல்லூரி போன்ற கல்லூரிகள் அகில இந்திய அளவிலான பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உயர்கல்வி முடித்துள்ள நிலையில் வேலைவாய்ப்புக்கான நேர்முக தேர்வில் அவர்களால் சாதிக்க முடியவில்லை. இதற்காக அவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளித்தோம். அதன்பின் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த முகாம்களில் சுமார் 8 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அதில் 1,850 பேர் வேலைவாய்ப்பினையும் பெற்றனர். தற்போது நானோ தொழில்நுட்பத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் இப்போது சீனா, இந்தியா போன்றவை ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன. இதற்கு காரணம் இங்குள்ள மனிதவளம்தான்.

தற்போது பட்டம்பெற்றவர்கள் பெற்றோருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். திருமணமாகி சென்றாலும் அவர்களோடு உறவோடு இருங்கள். சமுதாயத்தில் தன்னை வருத்திக்கொண்டு உங்களை இந்த நிலைமைக்கு உயர்த்தியவர்கள் அவர்கள்தான். நீங்கள் சமுதாயத்துக்கும், புதுவை மாநில வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கவேண்டும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன் பேசியதாவது:–

இந்த காலத்தில் ஒவ்வொருவரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக வாய்ப்புகளை பயன்படுத்திகொள்ள வேண்டும். திறமைகளை மேம்படுத்த தொடர்புகளை பெருக்கிக்கொள்ள வேண்டும். விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பாங்கினை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த நூற்றாண்டு இந்திய இளம் பெண்களுக்கானது. பாரதிதாசன் பெயரில் செயல்படும் இந்த கல்லூரியை பாரதிதாசன் பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் உயர்கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ராஜிசுகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story