புதுச்சேரி வரலாறு பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் கவர்னர் கிரண்பெடி விருப்பம்


புதுச்சேரி வரலாறு பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் கவர்னர் கிரண்பெடி விருப்பம்
x
தினத்தந்தி 23 Feb 2019 5:15 AM IST (Updated: 23 Feb 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளின் பாடத்திட்டத்தில் புதுச்சேரியின் வரலாறு இடம்பெற வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி நேற்று கல்வித்துறை அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது கடந்த முறை ஆய்வு செய்து குறிப்பிட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து துறையின் இயக்குனர் ருத்ரகவுடுவிடம் கேட்டறிந்தார்.

அப்போது, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கவேண்டும் என்றும், சமூக அறிவியல் பாடத்தில் புதுச்சேரி வரலாறு இடம்பெற செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இலவச சீருடை தொடர்பாக பெற்றோரிடம் கருத்துகேட்பு முறையை தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மாணவர் சமுதாயத்தை கொண்டு கல்விக்காக தனி கேபிள் டி.வி. சேனல் தொடங்கவேண்டும். இந்த சேனலில் கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு தொடர்பான மாணவர்களின் திறன்களை ஒளிபரப்பவேண்டும், இதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பினையும் பெற வேண்டும் என்றும் கவர்னர் வலியுறுத்தினார். வெளிநாட்டு மொழிகளையும் கற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்திதர வேண்டும் என்றார்.

கிராப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் விவசாய பணிகள் குறித்தும், தோட்டக்கலை, மலர் சாகுபடி மற்றும் பிற பயிர் சாகுபடி குறித்தும் களஆய்வுக்கு சென்று கற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார். புத்தக கண்காட்சிகளை குழந்தைகள் தினத்தில் தவறாமல் நடத்த வேண்டும் என்றும் கவர்னர் கிரண்பெடி கூறினார்.

தொடர்ந்து அவரிடம், முதல்–அமைச்சரின் போராட்டத்தை காகத்துடன் ஒப்பிட்டது தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து நிருபர்கள் கேட்டபோது, அதற்கு கவர்னர் கிரண்பெடி, தர்ணா போராட்டத்தை நான் காகத்துடன் ஒப்பிடவில்லை. அது சிலரின் கற்பனை என்று குறிப்பிட்டார்.


Next Story