ரூ.10 ஆயிரம் கொடுக்காததால் பயங்கரம் பெண் மீது திராவகம் வீச்சு கணவரை போலீஸ் தேடுகிறது
பெங்களூருவில் ரூ.10 ஆயிரம் கொடுக்காததால் பெண் மீது திராவகம் வீசிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெங்களூரு,
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் பிஷ்வாஸ். இவரது மனைவி தாப்சி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. பிஷ்வாஸ் வேலைக்கு எங்கும் செல்லாமல் சுற்றி திரிந்தார். தாப்சி கூலி வேலைக்கு சென்றார். பிஷ்வாசுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் அவர் மதுஅருந்த தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில், பிஷ்வாசை பெங்களூருவில் வசிக்கும் நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது வாடகை தாய் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று பிஷ்வாசிடம், பெங்களூரு நண்பர் கூறினார். இதையடுத்து, தனது மனைவி, குழந்தைகளுடன் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து கடந்த 4-ந் தேதி பிஷ்வாஸ் பெங்களூருவுக்கு வந்தார். நாகரபாவி அருகே கல்யாண்நகரில் உள்ள மருத்துவ மையத்திற்கு பிஷ்வாசை, அவரது நண்பர் அழைத்து சென்றார். ஆனால் அன்றைய தினம் மருத்துவ மையத்தின் அதிகாரிகளை சந்திக்க முடியாமல் போனது. இதனால் தனது மனைவி, குழந்தைகளுடன் பெங்களூருவில் இருந்து பிஷ்வாஸ் மேற்குவங்காளத்திற்கு புறப்பட்டு சென்றார்.
மனைவி மீது திராவகம் வீச்சு
அதன்பிறகு, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொடுப்பதற்காக கடந்த 9-ந் தேதி மீண்டும் தனது மனைவி, குழந்தைகளை நாகரபாவிக்கு பிஷ்வாஸ் அழைத்து வந்தார். பின்னர் அந்த மருத்துவ மையத்தில் மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு பிஷ்வாஸ் மட்டும் மேற்கு வங்காளத்திற்கு புறப்பட்டு சென்றிருந்தார். மேற்கு வங்காளத்தில் இருந்து கொண்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தன்னுடைய செலவுக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி வைக்கும்படி தாப்சியிடம் பிஷ்வாஸ் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்று அவர் திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பிஷ்வாஸ் மேற்கு வங்காளத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு வந்தார்.
பின்னர் மருத்துவ மையத்திற்கு சென்ற பிஷ்வாஸ் தனது மனைவியிடம் ரூ.10 ஆயிரம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் பணம் கொடுக்காததால் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து மனைவி தாப்சியின் முகத்தில் பிஷ்வாஸ் ஊற்றினார். இதில், அவரது முகம், கழுத்து பகுதி வெந்து போனது.
வலைவீச்சு
இதனால் வலி தாங்க முடியாமல் அவர் கதறி துடிதுடித்தார். உடனே அங்கிருந்து பிஷ்வாஸ் தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த தாப்சியை அங்கிருந்தவர்கள் விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அன்னபூர்னேஷ்வரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பிஷ்வாசை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story