பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் திடீர் சோதனையால் பரபரப்பு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் திடீர் சோதனையால் பரபரப்பு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Feb 2019 4:51 AM IST (Updated: 23 Feb 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து ரெயில் நிலையங்களில் நடந்த திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு,

பெங்களூரு மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்து போலீஸ்காரர் ஒருவர் பேசினார். அப்போது எதிர் முனையில் பேசிய மர்மநபர், பெங்களூரு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதை கேட்டு போலீஸ்காரர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உடனடியாக சிட்டி ரெயில்வே போலீஸ் அதிகாரிகளுக்கு, போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ரெயில்கள், பயணிகளின் உடைமைகளை ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர்.

பயணிகள் பீதி

சிட்டி ரெயில் நிலையத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது ரெயில் நிலையத்தில் இருந்து எந்த ஒரு வெடிகுண்டும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இந்த மிரட்டல் காரணமாக ரெயில் பயணிகள் இடையே பீதி உண்டானது. ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்ததால், பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ரெயில்கள் தாமதம் இல்லாமல் புறப்பட்டு சென்றன. இதுகுறித்து சிட்டி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பெங்களூரு ரெயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் போன்று, மைசூரு, பாகல்கோட்டை, பெலகாவி, சாம்ராஜ்நகர், தாவணகெரே உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு ரெயில் நிலையங்களுக்கும் நேற்று அதிகாலையில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், ரெயில்வே போலீசார் மைசூரு, பெலகாவி,பாகல்கோட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். ரெயில்கள், பயணிகள், அவர்களது உடைமைகள் என சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த ரெயில் நிலையங்களில் எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை. இதனால் அந்த வெடிகுண்டு மிரட்டல்கள் வெறும் புரளி என்று தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த மர்மநபர்களை ரெயில்வே போலீசார் தேடிவருகிறார்கள். இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், பயணிகளும் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள்.

Next Story