பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் முதல்-மந்திரி குமாரசாமியுடன் ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் ஆலோசனை


பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் முதல்-மந்திரி குமாரசாமியுடன் ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் ஆலோசனை
x
தினத்தந்தி 23 Feb 2019 5:06 AM IST (Updated: 23 Feb 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரியுடனான சந்திப்புக்கு பிறகு முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் தொடங்கப்படும் என்று கடந்த ஆண்டு (2018) ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

பியூஸ்கோயல் சந்திப்பு

ஆனால் அதற்கு முன்பாகவே இந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வந்தன. தற்போது இந்த ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செய்து வருகின்றன.

இந்த நிலையில், முதல்-மந்திரி குமாரசாமியை பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பெங்களூரு புறநகா் ரெயில் திட்டம் குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரூ.400 கோடி நிதி

மத்திய மந்திரி பியூஸ்கோயலுடன் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் குறித்து விவாதித்தேன். இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் பியூஸ்கோயலுக்கு தனி ஆர்வம் உள்ளது. 1995-ம் ஆண்டு தேவேகவுடா முதல்-மந்திரியாக இருந்தபோது, இந்த திட்டத்திற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மத்திய மந்திரியாக இருந்த அனந்தகுமார் அதற்கு முயற்சி எடுத்தார்.

ஆனால் அவர் மரணம் அடைந்துவிட்டார். அனைத்து வகையான ஒப்பந்தங்களுக்கும் மாநில அரசு தயாராக உள்ளது. இந்த திட்டத்திற்காக மாநில அரசு ரூ.400 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த புறநகர் ரெயில் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்ட முடிவு செய்துள்ளோம். ரூ.23 ஆயிரம் கோடி செலவில் 160 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதை அமைக்கப்படுகிறது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

வை-பை வசதி

அதைதொடர்ந்து மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிலத்தை மாநில அரசு ஒதுக்கும். ரெயில்வே வரலாற்றில் இந்த திட்டத்தை போல் வேறு எந்த திட்டத்திற்கும் இவ்வளவு வேகமாக பணிகள் நடைபெறவில்லை. ரூ.23 ஆயிரம் கோடி செலவில் 160 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்கள், விமான நிலையத்திற்கு இந்த திட்டத்தின் மூலம் தொடர்பு வசதி கிடைக்கும். 82 ரெயில் நிலையங்களுக்கு இந்த திட்ட வசதி கிடைக்கும். அடுத்த 6 மாதங்களில் கர்நாடகம் முழுவதும் ‘வை-பை’ இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.

புறநகர் ரெயில் திட்டத்தில் இடம் பெறும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் இந்த ‘வை-பை’ வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். இந்த புறநகர் ரெயில் திட்டத்திற்கு மாநில அரசு 19 நிபந்தனைகளை விதித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை நேரில் சந்தித்து பேசினேன்.

ரூ.6,000 கோடி நிலம்

அந்த நிபந்தனைகள் அனைத்தையும் ரத்து செய்வதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். ரூ.6,000 கோடி மதிப்புள்ள நிலத்தை மாநில அரசு, 1 ரூபாய் குத்தகைக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. 160 கிலோ மீட்டர் தூர பாதையில் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட பாதையாகவும், 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாதாரண பாதையாகவும் அமைக்கப்படும்.

இந்த பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் மறைந்த அனந்தகுமாரின் கனவு திட்டம் ஆகும். அவரது கனவை நனவாக்குவது எனது கடமை ஆகும். இந்த திட்ட பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

அதனால் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்த திட்ட பணிகளுக்கு பொருந்தாது. வருகிற 25-ந் தேதி மத்திய மந்திரிசபை கூட்டம் நடக்கிறது. அதில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெற்று உடனடியாக பணிகள் தொடங்கப்படும்.

இந்த திட்டத்தில் சர்வதேச விமான நிலையத்திற்கு ெதாடர்பு வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய-மாநில அரசுகள் 2 என்ஜின் ரெயிலை போல் பணியாற்ற வேண்டும். கா்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு கூடுதல் எம்.எல்.ஏ.க்களை வழங்கியிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். இந்த திட்டம் 6 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.”

இவ்வாறு பியூஸ்கோயல் கூறினார்.

தலைமை செயலாளர்

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், எம்.பி.க்கள் பி.சி.மோகன், ராஜீவ் சந்திரசேகர் மற்றும் மாநில அரசு, ரெயில்வேத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story