கோணம் அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்


கோணம் அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2019 10:45 PM GMT (Updated: 23 Feb 2019 4:37 PM GMT)

கடந்த சில நாட்களுக்கு முன் ஜாக்டோ–ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

கடந்த சில நாட்களுக்கு முன் ஜாக்டோ–ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின்போது நடந்த மறியலில் கலந்து கொண்டு கைதான தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்த 27 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் அரசிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அரசு கல்லூரி ஆசிரியர் கழக தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட 16 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி நேற்று முன்தினமும், நேற்றும் தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் ஆசிரியர் கழகம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டம் நடந்தது. இதேபோல் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டம் நடந்தது.

நேற்று 2–வது நாளாக நடந்த இந்த போராட்டத்தில் ஆசிரியர் கழக மதுரை மண்டல தலைவர் அஜித், கல்லூரி கிளை செயலாளர் ஜெர்மானுஸ் அலெக்ஸ், பொருளாளர் மெர்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

Next Story