மாரண்டஅள்ளி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


மாரண்டஅள்ளி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Feb 2019 10:30 PM GMT (Updated: 23 Feb 2019 4:38 PM GMT)

மாரண்டஅள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் 70–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டது. மேலும் இந்த கிராமத்திற்கு வழங்கப்படும் ஒகேனக்கல் குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.

இந்தநிலையில் குடிநீர் கேட்டு நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் திடீரென மாரண்டஅள்ளி– ராயக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாரண்டஅள்ளி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது 10 நாட்களுக்கு ஒரு முறை ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு குடும்பத்திற்கு 3, 4 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இந்த தண்ணீர் போதுமான இல்லை. இதனால் விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறினர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story