வெந்நீரை ஊற்றி லாரி டிரைவர் கொலை: தலைமறைவாக இருந்த மனைவி கைது


வெந்நீரை ஊற்றி லாரி டிரைவர் கொலை: தலைமறைவாக இருந்த மனைவி கைது
x
தினத்தந்தி 24 Feb 2019 3:30 AM IST (Updated: 23 Feb 2019 10:50 PM IST)
t-max-icont-min-icon

வெந்நீரை ஊற்றி லாரி டிரைவர் கொலை தலைமறைவாக இருந்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை நெற்குன்றம், மந்தைவெளி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). லாரி டிரைவர். இவருடைய மனைவி விமலா(42). ரமேசுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

வழக்கம்போல் 18-ந்தேதி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ரமேஷ், சமையல் அறையில் இருந்த மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த விமலா, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து கணவரின் முதுகில் ஊற்றினார். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி கோயம்பேடு போலீசார் கொலை வழக்காக பதிவுசெய்து தலைமறைவான விமலாவை தேடி வந்தனர்.

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த விமலாவை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், தனது கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததுடன், தன்னை அடித்து உதைத்து வந்தார். சம்பவத்தன்றும் தன்னை அடித்து உதைத்ததால் ஆத்திரத்தில் வெந்நீரை ஊற்றியதாகவும், அதில் உடல் வெந்து ரமேஷ் இறந்துவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் கைதான விமலா சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story