விக்கிரவாண்டி அருகே விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விக்கிரவாண்டி அருகே விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Feb 2019 4:15 AM IST (Updated: 23 Feb 2019 10:55 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே உள்ள ஆறேரிக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 52), விவசாயி. இவரது மனைவி உமா(43). இவர்களுடைய மகன் சிலம்பரசன்(28). சம்பவத்தன்று ஜெயபால் வீட்டை பூட்டி, சாவியை வீட்டின் முன்பு இருந்த சாக்குமூட்டையில் வைத்து விட்டு தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள விளை நிலத்துக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் சிலம்பரசன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரத்தை காணவில்லை.

இதுகுறித்து ஜெயபால் பெரியதச்சூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜெயபால் வீட்டை பூட்டிவிட்டு, சாவியை சாக்குமூட்டையில் வைத்து சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அதை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று, பீரோவை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story