தேர்வு மையங்களுக்கு அருகில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை கலெக்டர் ஆசியா மரியம் அறிவிப்பு


தேர்வு மையங்களுக்கு அருகில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை கலெக்டர் ஆசியா மரியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2019 11:30 PM GMT (Updated: 23 Feb 2019 6:15 PM GMT)

தேர்வு நேரத்தில் தேர்வு மையங்களுக்கு அருகில் 100 மீட்டர் சுற்றளவில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அடுத்த மாதம் (மார்ச்) நடைபெற உள்ள மேல்நிலை பொதுத்தேர்வுகள் மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுதேர்வை 201 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 302 மாணவர்களும், 11 ஆயிரத்து 834 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 136 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 84 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

9 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தேர்வை கண்காணிக்க 86 முதன்மை கண்காணிப்பாளர்களும், 86 துறை அலுவலர்களும், 300 நிரந்தர பறக்கும் படையினரும், 1,300 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல் பிளஸ்-1 தேர்வை 198 பள்ளிகளை சேர்ந்த 9,702 மாணவர்களும், 10,750 மாணவிகளும் என மொத்தம் 20,452 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 309 பள்ளிகளை சேர்ந்த 11,574 மாணவர்களும், 10,353 மாணவிகளும் என மொத்தம் 21,927 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

காவல்துறையினர் வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துச்செல்லும் பணிகளின்போது முழுமையான அளவில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் வினாத்தாள் கட்டுக்காப்பக மையங்களுக்கு 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்து துறையினர் தேர்வு நாட்களில் பஸ்சில் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகள், குறிப்பாக இலவச பஸ்பாஸ் உடையவர்களை தேர்வு நேரத்தின்போது எல்லா வழித்தடங்களிலும், அனைத்து பஸ்களிலும் மறுப்பேதும் கூறாமல் ஏற்றி செல்லவும், தேர்வுமைய பள்ளிக்கு அருகில் இறக்கிவிடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேர்வு காலங்களில் இரவு நேரங்களில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்த அனுமதி அளிக்ககூடாது. குறிப்பாக தேர்வு மையங்களுக்கு அருகில் தேர்வு நேரங்களில் 100 மீட்டர் சுற்றளவில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதை தடை செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன் உள்பட கல்வித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story