மாவட்டத்தில் 661 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்


மாவட்டத்தில் 661 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 24 Feb 2019 4:30 AM IST (Updated: 23 Feb 2019 11:48 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 661 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவுசெய்து கொள்ளாதவர்களும், 18 வயது பூர்த்திடைந்த இளம் வாக்காளர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள ஏதுவாக படிவம் 6 சேர்க்கை விண்ணப்பங்களை அந்தந்த தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் அளித்து பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பணியின் தொடர்ச்சியாக நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்றது. வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6, நீக்கம் செய்ய படிவம்-7, திருத்தம் செய்ய படிவம்-8, சட்டசபை தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய படிவம் -8ஏ ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தனர்.

நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றத்திற்கான படிவங்கள் தேவையான அளவு உள்ளதா? என்றும் பார்வையிட்டார்.

அப்போது அவர், நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டை பெற்றிட ஏதுவாக, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், கொல்லிமலை, பரமத்திவேலுார், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகங்களிலும், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளத்திலும் அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் வாக்காளர்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டைகளை உரிய கட்டணமான ரூ.25-ஐ செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

இந்த ஆய்வின்போது நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், தாசில்தார் செந்தில்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story