சுருக்குமடி வலையை பயன்படுத்துவதை தடுக்கக்கோரி 25 கிராம மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு
சுருக்குமடி வலையை பயன்படுத்துவதை தடுக்கக்கோரி பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த 25 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இவர்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை,
கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை பகுதியில் புதுக்குப்பம், வேளங்கிராயன்பேட்டை, ரெட்டியார்பேட்டை, அய்யம்பேட்டை, நஞ்சலிங்கம் பேட்டை, தம்மணாம்பேட்டை, சித்திரைப்பேட்டை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன.
இங்குள்ள மீனவர்கள் அன்னங்கோவில், முடசோல் ஓடை ஆகிய மீன்பிடி தளங்களில் இருந்து படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், மத்திய அரசு இரட்டை மடி மற்றும் சுருக்கு மடி வலையை மீன்பிடிக்க பயன்படுத்த கூடாது என்று தடை விதித்துள்ளது.
ஆனால், இந்த வகை வலைகளை வேறுசில பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் சிலர் பயன்படுத்துவதாக தெரிகிறது. இதை தடுக்க கோரி, பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், நேற்று மீனவர்கள் ஒருங்கிணைந்து அன்னங்கோவில் மீன்பிடி தளத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தனர். இதற்கு விசைப்படகு உரிமையளர்கள் சங்க தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், 1986-ம் ஆண்டு முதல் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இரட்டை மடி, சுருக்கு மடி வலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க கூடாது என்று அரசு அறிவித்தது. அதை பின்பற்றி, இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் யாரும் அத்தகையை வலைகளை பயன்படுத்துவது இல்லை.
ஆனால், வேறுசில பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகிறார்கள். இதை அன்னங்கோவில் மீன்பிடி தளத்திற்கு கொண்டு வந்தும் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடலில் மீன்வளமும் பாதிக்கப்படுகிறது. எனவே இதில் அதிகாரிகள் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் 25 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அனைவரும், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று தெரிவித்தார். கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, சுருக்கு வலை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தக்கோரி, நேற்று 3-வது நாளாக 25 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
Related Tags :
Next Story