கடலில் மிதந்து வந்த மிதவை கடத்தல்கார்களுக்கு சொந்தமானதா? கடலோர காவல் படை விசாரணை


கடலில் மிதந்து வந்த மிதவை கடத்தல்கார்களுக்கு சொந்தமானதா? கடலோர காவல் படை விசாரணை
x
தினத்தந்தி 24 Feb 2019 4:30 AM IST (Updated: 24 Feb 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே கடலில் மிதவை ஒன்று மிதந்து வந்தது. இது கடத்தல்காரர்களுக்கு சொந்தமானதா? என்பது குறித்து கடலோர காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேளாங்கண்ணி,

கடலில் ஆபத்தான இடங்கள், பாறைகள் நிறைந்த பகுதி, ஆழம் குறைந்த பகுதி ஆகியவற்றை கண்டறிவதற்காக ஆங்காங்கே “மிதவை” எனும் கருவி மிதக்க விடப்படுவது வழக்கம்.

சில நேரங்களில் கடலில் திசையை அறிந்து கொள்வதற்கான அடையாளமாகவும் மிதவையை பயன்படுத்துவார்கள். மிதவைகளில் பல வகைகள் உள்ளன. சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகம் உள்ள கடல் பகுதிகளில் மிதவைகளை மிதக்க விட்டிருப்பார்கள். தங்கம், போதை பொருட்களை கடல் வழியாக கடத்தி செல்லும் கடத்தல்காரர்களும் திசை அறிவதற்காக மிதவையை பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள புதுப்பள்ளி கடல் பகுதியில் நேற்று மிதவை ஒன்று மிதந்து வந்து கொண்டிருந்தது. இதை அப்பகுதி மீனவர்கள் பார்த்தனர். பொதுவாக கரைக்கு மிக அருகே மிதவை மிதப்பது கிடையாது என்பதால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மீனவர்கள் உடனடியாக கீழையூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர காவல் படை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் போலீசார் மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் அங்கு சென்று மிதவையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த மிதவையை மிதக்க விட்டவர்கள் யார்? வேறு பகுதியில் மிதக்க விட்ட மிதவை இப்பகுதிக்கு வந்ததா? இந்த மிதவை கடத்தல்காரர்களுக்கு சொந்தமானதா? என்பது குறித்து கடலோர காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து கடலோர காவல் படை அதிகாரிகள் கூறியதாவது:-

புதுப்பள்ளி கடல் பகுதியில் மிதந்து வந்துள்ள மிதவை சரக்கு கப்பல்களில் பயன்படுத்தக்கூடியது போல தெரிகிறது. காரைக்கால் துறைமுக பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்துக்காக மிதக்க விடப்பட்ட மிதவைகள் தவறுதலாக இங்கு கரை ஒதுங்கி இருக்கலாம். மிதவை யாருடையது? என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர். 

Next Story