அயனாவரத்தில் பரிதாபம் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து 3 மாத குழந்தை பலி
அயனாவரத்தில், ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்த 3 மாத ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
அம்பத்தூர்,
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்தவர் வேலன்(வயது 40). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி அர்ச்சனா(28). இவர்களுக்கு யோகேஷ் ராஜ் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வேலன், மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தனது ஆட்டோவில் அயனாவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
ஆட்டோவில் இருந்து விழுந்தனர்
அயனாவரம் தாகூர் நகர் அருகில் வரும்போது சாலை ஓரத்திலல் குடிபோதையில் நடந்து வந்த ஒருவர் மீது மோதாமல் இருக்க வேலன் திடீரென பிரேக் பிடித்து ஆட்டோவை திருப்பினார்.
இதில் ஆட்டோவில் இருந்த அவரது மனைவி மற்றும் 3 மாத கைக்குழந்தை இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் அர்ச்சனாவுக்கு லேசான காயமும், குழந்தை யோகேஷ் ராஜுக்கு தலையில் படுகாயமும் ஏற்பட்டது.
உயிரிழந்தது
உடனடியாக குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை யோகேஷ் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தது.
பலியான குழந்தையின் உடலை பார்த்து கணவன்-மனைவி இருவரும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story