வேடசந்தூர் அருகே இரும்பு கம்பியால் அடித்து தி.மு.க. பிரமுகர் கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வேடசந்தூர் அருகே இரும்பு கம்பியால் அடித்து தி.மு.க. பிரமுகர் கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Feb 2019 4:00 AM IST (Updated: 24 Feb 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே இரும்பு கம்பியால் அடித்து தி.மு.க. பிரமுகரை மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கெண்டையகவுண்டனூரை சேர்ந்தவர் சவடமுத்து என்ற மொராஜ் (வயது 45). இவருக்கு பூங்கொடி, லட்சுமி ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். பூங்கொடிக்கு சசிகலா (18), சர்மிளா (14) என்ற 2 மகள்களும், லட்சுமிக்கு வடிவேல்ராஜா (10) என்ற மகனும் உள்ளனர். சவடமுத்து அந்த பகுதியின் தி.மு.க. கிளை பிரதிநிதியாக இருந்து வந்தார். அவர் சொந்தமாக 2 மினி லாரிகளும், ஒரு வேனும் வைத்து வாடகைக்கு விட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வீட்டிற்கு சென்று அவர் சாப்பிட்டு விட்டு, ஊருக்கு அருகே உள்ள உறவினருக்கு சொந்தமான அரிசி ஆலைக்கு வந்தார். அங்கு மினி லாரி டிரைவர் விஷ்ணுபிரகாஷ் (22) என்பவர் சவடமுத்துவிடம் வாடகை பணம் கொடுத்து விட்டு லாரியை நிறுத்தி விட்டு சென்றார். அந்த அரிசி ஆலையின் உரிமையாளர் பரமசிவம் ஆலைக்குள் தூங்க சென்று விட்டார். ஆலை வளாகத்தில் உள்ள மரத்தடியில் சவடமுத்து படுத்து தூங்குவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவு ஆலை வளாகத்தில் மரத்தடியில் கட்டிலில் சவடமுத்து படுத்து தூங்கினார்.

நேற்று காலை 6.30 மணிக்கு அங்கு வந்த சுமை தூக்கும் தொழிலாளி ராமசாமி ரத்த வெள்ளத்தில் சவடமுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே ஆலை உரிமையாளர் பரமசிவத்திடம் அவர் கூறினார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த அவருடைய மனைவிகள் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த சவடமுத்துவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

சம்பவம் நடந்த இடத்துக்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாசினி, வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் சவடமுத்துவின் தலை மற்றும் முகத்தில் பயங்கரமாக தாக்கி கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

கொலை நடந்த இடத்துக்கு தடயவியல் நிபுணர் சீனியம்மாள் வந்து பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் லிங்கா வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனை நடத்தினர். மோப்ப நாய் கெண்டையகவுண்டனூர்-தாடிக்கொம்பு ரோட்டில் கோவில்பட்டி பாறை என்னுமிடம் வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

பின்னர் அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தொழில் போட்டியில் ஏதும் முன்விரோதம் காரணமாக சவடமுத்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story